அலர் வெளியீடு பற்றி
ஒரு மொழியில் புதிய நூல்களின் வரவு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஏற்கெனவே வெளிவந்த நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட வேண்டியதும் முக்கியம். கால வெள்ளத்தில் கரையொதுங்கும் நூல்கள் அதன்பின் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.
'மானுடத்தின் மேன்மைக்கும் அறிவுத் துறையின் வளர்ச்சிக்கும் உண்மையான பங்களிப்பை நல்கக்கூடிய இலக்கியங்களும் பல்துறை ஆய்வுகளும் அவ்வப்போது மறுபதிப்பு செய்யப்பட்டு அடுத்து வரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட பதிப்பகம் தான் ‘அலர் வெளியீடு’.
புத்தகங்கள்
சகாயம் செய்த சகாயம்
பெருமாள்முருகன்
₹150
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உ. சகாயம் பணியாற்றியபோது அவரது செயல்பாடுகளைச் செய்திகள், நிகழ்வுகள், மக்கள் வாய்மொழி வழக்காறுகள் வழியாகக் கவனித்து வந்த எழுத்தாள மனப்பதிவு இந்நூல் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வாழ்க்கை வரலாறோ துல்லியமான ஆவணப் பதிவோ அல்ல. துதிபாடும் நோக்கம் கொண்டதும் அல்ல. நேர்மையான அதிகாரி ஒருவரைக் கௌரவிக்க வேண்டும் என்னும் எண்ணத்திலும் அதேசமயம் அதிகாரி ஒருவரின் எல் லைகள் பற்றிய புரிதலுடனும் சுயபார்வை துலங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆளுமைகளை எவ்விதம் கொண்டாடுவது என்பதற்கான சான்றாகும் இத்தகைய எழுத்து முறை தமிழுக்கு மிகவும் புதிது. -பெருமாள்முருகன்
நெஞ்சம் மறப்பதில்லை
அமுதன் அடிகள்
₹150
பதினைந்து ஆண்டுக் காலமாகத் தவத்திரு. குன்றக்குடி அடிகளாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவன் நான். வேறு சமயத்தைச் சார்ந்தவனாயினும் என்னைத் தம் உடன்பிறவாச் சகோதரராகவே அடிகளார் ஏற்றுக் கொண்டார். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, அவரது அன்புக்கும் பாசத்துக்கும் உரியவனாகும் வாய்ப்புப் பெற்றதைப் பெறலரும் பெரும் பேறாகவே கருதுகின்றேன். -அமுதன் அடிகள்
கன்னிச்சங்கு (திருக்காவலூர்க் கலம்பகத்திறனாய்வு)
பேராசிரியர் முனைவர் அ. அந்தோனி குருசு
₹150
இந்தப் புத்தகம் வீரமாமுனிவர் இயற்றிய புகழ்பெற்ற 'திருக்காவலூர்க் கலம்பகம்' என்னும் தமிழ் இலக்கியத்தின் விரிவான திறனாய்வு நூலாகும். அன்னை மரியாவின் புகழ்பாடும் இந்த 18-ஆம் நூற்றாண்டுப் படைப்பினைப் பேராசிரியர் முனைவர் அ. அந்தோனி குருசு ஆழமாகப் பகுப்பாய்வு செய்துள்ளார். மூலக்கவிதைகளின் கடினமான இலக்கணக் கட்டமைப்பு, உவமைகள் மற்றும் இறையியல் கருத்துகளை இந்நூல் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது. ஐரோப்பியக் கிறித்துவ பக்தியும், பழமையான தமிழ் இலக்கிய மரபும் எவ்வாறு இதில் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு சிறந்த கல்விசார் ஆராய்ச்சிப் படைப்பு இதுவாகும்.
பழம்படு பனை (பனை கதைகள் 120)
ம. கேசவன் - அதங்கோடு அனிஷ்குமார்
₹1500
பனை மரம் தொடர்பான 120 கதைகளின் பெருந்தொகுப்பு. தொகுதி 1 மற்றும் தொகுதி 2 ஆகிய இரண்டும் சேர்த்து ஒரே முழுத் தொகுப்பாக அலர் வெளியீட்டின் வாயிலாக வெளிவருகிறது. சிறுகதை, பண்பாடு, சூழலியல், இயற்கை மற்றும் நாட்டுப்புற மரபுகளை ஒருங்கே தாங்கி நிற்கும் அரிய ஆவணம்.










